
நன்கொடை நிதி வழங்க தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்கள், தமிழ் ஆர்வலர்கள் முன்வர வேண்டி கோரிக்கை
ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தமிழ்த்துறை தொடர்ந்து செயல்பட நன்கொடை நிதி வழங்க தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்கள், தமிழ் ஆர்வலர்கள்
முன்வர வேண்டி கோரிக்கை.
ஜெர்மனி: கடந்த 58 ஆண்டு காலமாக தமிழ்ப்பணி செய்து வரும் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தற்போது மூடப்படும் நிலையில் உள்ளதை தங்களின் கவனத்திற்கு தாழ்மையுடன் கொண்டு வருகிறோம்.
ஐரோப்பாவில் தமிழ் ஆய்வு செய்து வரும் வெகு சில துறைகளில் ஒன்று கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியவியல் மற்றும் தமிழ்த்துறை ஆகும். இத்துறை 1963 முதல், தமிழ் கற்பித்தல் மற்றும் தமிழ் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்புகளைத் தந்ததுடன், சில குறிப்பிடத்தக்க அறிஞர்களையும் உருவாக்கியுள்ளது. 40000-க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களைக் கொண்டுள்ள இந்த பல்கலைக்கழக நூலகம் மேற்கத்திய உலகில் உள்ள மிகப்பெரிய தமிழ் நூலகங்களில் ஒன்று. இத்தமிழ் துறையின் தற்போதைய பேராசிரியர் உல்ரிக்க நிக்லஸ் அவர்கள், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் தமிழ்த்துறையின் உயர்ந்த விருதுகளான ஜி.யு.போப் விருது மற்றும் இலக்கண விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது, இத்துறை, ஐரோப்பாவின் மொழி வரையறைப்படி தமிழை வெளிநாட்டு மொழியாக கற்பிப்பதற்கான வழிமுறையை ஆராய்ச்சி செய்து, நிறுவவும் முயன்று வருகிறது. ஆனால் நிதிப்பற்றாக்குறைக் காரணமாகவும், தற்போதைய பேராசிரியர் உல்ரிக்க நிக்லஸ் பணிமூப்பு அடைவதாலும், பல்கலைக்கழக நிர்வாகம், பல்வேறு தனிச்சிறப்புகள் வாய்ந்த தமிழ்த்துறையை மூட முடிவு செய்துள்ளது. இத்துறையின் செயல்பாடுகள் தொடரும் வண்ணம், ஒரு கூட்டு நிதிதிரட்டல் முயற்சியை கடந்த பிப்ரவரி 20 முதல் தொடங்கியுள்ளோம். இப்பெரும் முயற்சிக்கு உடனடியாக € 137500 வருகின்ற மார்ச் 2021-க்குள் தேவைப்படுகிறது.
-
இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது கீழ்கண்ட செயல்பாடுகள் தொடர பயன்படுத்தப்படும்.ஒரு விரிவுரையாளர் பதவியை திட்டமிட்டபடி மே 2022 வரை நீட்டிக்கவும்,
-
நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஐரோப்பிய மொழி வரையறைக்கு ஏற்ப தமிழ் கற்பிக்கவும்,
-
பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவித்தலுக்கும்,
-
கள ஆய்வு மற்றும் வருடாந்திர கோடைகால தமிழ் பள்ளியை (மொழி மற்றும் கலாச்சாரம்) தொடர்வதற்கும்,40000+ தமிழ் புத்தகங்கள் கொண்ட நூலகத்தை பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படும்.
தொடர்ந்து நடந்து வரும் இம்முயற்சியில், இதுவரை 7% நிதி மட்டுமே திரட்டப்பட்டுள்ளது. செம்மொழியான தமிழின் பெருமையை மகாகவி பாரதியின் கூற்றுக்கிணங்க உலகறியச் செய்து வரும் இத்தமிழ்த்துறை தொடர்ந்து செயல்பட தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உதவியை நாடுகிறோம். தங்களால் இயன்ற உதவியை செய்து இந்த முயற்சி வெற்றியடைய உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிதி உதவி வழங்க, தயவு செய்து www.europetamilargal.org இணைய முகவரியை பார்க்கவும். மேலும் விவரங்கள் அறிய info@europetamilargal.org என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.
ஐரோப்பா தமிழர்கள் – ஒரு பார்வை:
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் தினசரி வாழ்வியலில் அந்நிய கலாச்சாரம் மற்றும் மொழி கலந்துள்ளது. ஆயினும், ஐரோப்பா முழுவதிலும் இருக்கும் தமிழ் அமைப்புகள் நம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தோடு நம்மை வேரூன்றி இருக்க செய்கின்றன. நமது கலாச்சாரத்தை பேணி பாதுகாப்பதுடன் அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உறுதுணையாக நிற்கிறது.
முதன்முறையாக ஐரோப்பா முழுவதிலும் இருக்கும் தமிழ் அமைப்புகள், ஐரோப்பா தமிழர்கள் என்கிற கூட்டமைப்பின் மூலம் ஒன்றிணைந்துள்ளது. ஐரோப்பா தமிழர்கள் என்னும் இக்கூட்டமைப்பு ஐரோப்பா வாழ் தமிழர்களின் ஓர் குரலாய் என்றும் ஒலிக்கும்.