
மாண்புமிகு முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு ஐரோப்பா தமிழர்கள் சார்பில் எங்களது நன்றிகள்
கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைக்கு ரூபாய் 1 கோடியே 25 லட்சத்தை நிதி உதவியாக அளித்த தமிழ் நாடு அரசுக்கும், மாண்புமிகு முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் ஐரோப்பா தமிழர்கள் சார்பில் எங்களது நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
சுமார் 58 ஆண்டு காலமாக கொலோன் பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த தமிழ்த் துறையை அதன் தற்போதைய பேராசிரியர் திருமதி உல்ரிக்க நிக்கலஸ் அவர்கள் பணிமூப்பு அடைந்தவுடன் அத்துறையை மூடுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் தமிழ் இருக்கை Inc. மற்றும் தமிழக அரசு இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு இத்துறை செயல்பட தேவைப்படும் தொகையை வழங்க பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக முதல் தவணையாக அமெரிக்காவின் தமிழ் இருக்கை (Tamil Chair Inc.) ரூ. 1 கோடியே 25 லட்சம் பல்கலைக்கழகத்துக்கு வழங்கி இருந்தது. இரண்டாவது தவணையாக தமிழக அரசு அளிக்க வேண்டிய ரூ. 1 கோடி 25 லட்சம் பல்கலைக்கழகத்தை வந்து அடையாததால் மூடபட வேண்டிய நிலைக்கு தமிழ்த்துறை உள்ளானது.
இச்சூழலில் ஐரோப்பாவில் உள்ள தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து ஐரோப்பா தமிழர்கள் எனும் கூட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் கூட்டு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது. நிதி திரட்டுவதற்காக இணையம் வழியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கொடையாளர்கள் இணையம் வழியாகவே நிதி அளிக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது. இம்முயற்சியில் சுமார் ரூ. 23 லட்சம் திரட்டப்பட்டு இருந்தது.
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசு இந்த துறையைக் காப்பாற்ற வேண்டி நிதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது இத்துறை செப்டம்பர் மாதத்துடன் மூடப்படும் எனும் செய்தியறிந்து உடனடியாக நிதி வழங்க அரசாணை பிறப்பித்து, மகாகவியின் கூற்றான தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்துள்ளார். தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு ஐரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பில் எங்களது நன்றிகளை உரித்தாக்குகிறோம். இந்தத் தொகை 2022 ஆண்டு ஜூன் மாதம் வரை இத்துறை தொடர்ந்து செயல்பட உதவும். எதிர்வரும் காலத்தில் கொலோன் பல்கலைக்கழகத்துடன் கலந்துரையாடி, தமிழ்த்துறையை தொடர்ந்து இயங்கச் செய்ய ஐரோப்பா தமிழர்கள் தனது முயற்சியை தொடரும்.
இம்முயற்சியில் பங்களித்த அனைத்து கொடையாளருக்கும், சமூக அமைப்புகளுக்கும், தமிழ் சங்கங்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும், அனைத்து நாடுகளிலிருந்தும் ஆதரவு வழங்கிய நல்உள்ளங்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழ்த் துறையை காப்பாற்ற எடுக்கப்படும் முயற்சிகளை தொடர்ந்து தமிழ்ச் சமூகத்திடம் கவனப்படுத்திவரும் ஊடகத்தினருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகள். குறிப்பாக தி இந்து தமிழ் நாளிதழுக்கு எங்கள் உளமார்ந்த நன்றி.
செய்தி தொடர்பாளர்,
ஐரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பு.